இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர் – ஒரு வார ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர் – ஒரு வார ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

ரோஹித் சர்மா தலைமையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். கடந்த திங்கட் கிழமை இரவு தலைவர் ரோஹித் சர்மா மும்பை வந்து சேர்ந்தார். இதேபோன்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் டெல்லியை வந்தடைந்தனர். அணியில் பெரும்பாலான வீரர்கள் திங்கட்கிழமையே துபாயில் இருந்து புறப்பட்டுவிட்டனர்.

ரவீந்திர ஜடேஜா துபாயில் இருந்து புறப்பட்டு சென்னையில் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஒருவார ஓய்வுக்கு பின்னர் தாங்கள் விளையாட உள்ள ஐபிஎல் அணிகளில் இணைய உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிடில் ஆர்டரில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரேயஸ் ஐயர், இம்முறை ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக களமிறங் உள்ளார். அவர், வரும் 16ஆம் திகதி பஞ்சாப் அணியுடன் இணைய உள்ளார்.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் சுமார் 2 மாத காலம் பங்கேற்க உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு வழங்கும் வகையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு உடனடியாக பாராட்டு விழா நடத்துவது குறித்து திட்டமிடவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This