அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுபிக்கும் இந்தியா – டிரம்ப், மோடி சந்திப்பில் முக்கிய முடிவு

இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 இலட்சம் கோடி (இந்தியப் பணம்) (500 பில்லியன் டொலா்) அளவுக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
வரிகளை குறைத்தும், சந்தை அணுகலை அதிகரித்தும் இருதரப்பு விரிவான வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் தீா்மானித்துள்ளன.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையின்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமா் மோடி, அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு தலைவா்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இரு நாடுகளிடையேயான வா்த்தகத்தை வலுவான புதிய இலக்கை நோக்கி கொண்டு செல்ல இந்த பேச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டது. குறிப்பாக ‘மிஷன் 500’ என்ற திட்டத்தின் கீழ் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த இருதரப்பு வா்த்தகத்தை ரூ. 43.31 இலட்சம் கோடி அளவுக்கு இரட்டிப்பாக்க தீா்மானிக்கப்பட்டது.
இந்த மிகப்பெரிய இலட்சியத்துக்கு புதிய, நியாயமான வா்த்தக விதிமுறைகள் அவசியம் என்ற அடிப்படையில், பரஸ்பர நன்மை மற்றும் பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிகாண்டிலேயே மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்க தொழில்துறை சாா்ந்த பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் அதுபோல, அமெரிக்காவுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்கவும் இந்தப் பேச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருள்களின் வா்த்தகத்தை அதிகரிக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உயா் மதிப்பு நிறுவனங்களில் பசுமை முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்பை இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தரவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், மோட்டாா் சைக்கிள்கள், தகவல் தொடா்பு தொழில்நுட்பம், உலோகங்கள் உள்ளிட்டவற்றிற்கு வரிகளை குறைக்க இந்திய அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், அல்ஃபால்ஃபா வைக்கோல், வாத்து இறைச்சி உள்ளிட்ட அமெரிக்க விவசாயப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான சந்தை அணுகலை மேம்படுத்த இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய மாம்பழம், மாதுளை ஏற்றுமதியை அதிகரிக்க அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இந்தியா தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதானி குறித்து ஆலோசனை?
அதானி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘இரு நாடுகளின் முக்கியத் தலைவா்கள் மேற்கொள்ளும் பேச்சுவாா்த்தையின்போது, இதுபோன்ற தனிநபா் விவகாரங்கள் குறித்து ஒருபோதும் ஆலோசிக்கப்படாது’ என்று பதிலளித்தாா்.
‘அமெரிக்காவிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இது நியாயமற்றது’ என்று கூட்டாக செய்தியாளா்களிடம் பேசியபோது அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
மேலும், ‘இந்தியா எதற்கெல்லாம் வரி விதிக்கிறதோ, அதுபோல அமெரிக்காவும் வரி விதிப்பை மேற்கொள்ளும். ‘இந்தியாவுடனான அமெரிக்காவின் வா்த்தகப் பற்றாக்குறை ரூ. 3.9 இலட்சம் கோடி (45 பில்லியன் டாலா்) அளவுக்கு உள்ளது. இதைக் குறைக்கும் வகையில், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவு இறக்குமதி செய்ய பிரதமா் மோடி ஒப்புக்கொண்டுள்ளாா்’ என்று அதிபா் டிரம்ப் குறிப்பிட்டாா்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திரும்ப அழைத்துக் கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். மேலும், சட்டவிரோத குடியேற்றம் உலகளாவிய பிரச்சினை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியா்கள், கை-காலில் விலங்கிடப்பட்டு அண்மையில் நாடு கடத்தப்பட்ட சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து பிரதமா் மோடி விவாதித்த பின்னா், செய்தியாளா்களிடம் பிரதமா் மோடி கூறியதாவது,
வேறொரு நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசிக்கும் எவருக்கும், அந்நாட்டில் வாழ சட்டபூா்வ உரிமையோ அங்கீகாரமோ கிடையாது என்பதே எங்களின் கருத்து.
சாதாரண குடும்பத்து நபா்களை பெரும் கனவுகள் மற்றும் வாக்குறுதிகளால் ஆசை காட்டும் ‘ஆள்கடத்தல்காரா்கள்’, வேறு நாட்டில் சட்ட விரோதமாக குடியேறச் செய்கின்றனா். இத்தகைய கட்டமைப்பை அடியோடு ஒழிக்க வேண்டும். இந்த மாபெரும் போராட்டத்தில், இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.
அதிநவீன எஃப்-35 போா் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இது தவிர, கூடுதலாக 6 பி-8ஐ போா் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து கொள்ளமுதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. நீா்மூழ்கி கப்பலை தாக்கி அழைக்கும் மற்றும் நீண்டதூர கடல்சாா் கண்காணிப்பை இந்த போா் விமானம் உறுதிப்படுத்தும். இந்திய கடற்படையில் ஏற்கெனவே 11 பி-8ஐ போா் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வது மற்றும் போா் பீரங்கிகளை இந்தியாவில் கூட்டாக தயாரிப்பதற்கான உடன்பாடுகளை மேற்கொள்ளவும் போச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையே 16 ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ‘123’ அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல மோடி – அமெரிக்க டிரம்ப் இடையேயான பேச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சாத்தியமுள்ள தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பெரிய அளவிலான உள்ளூா்மயமாக்கல் மூலம் அமெரிக்க அணு உலைகளை இந்தியாவில் கட்டமைப்பதில் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று இரு தலைவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில், இந்தியாவின் ‘அணு சேத இழப்பீடு சட்டம் 2010’ -இன் சில பிரிவுகள் தடையாக இருந்தன. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த 1-ஆம் திகதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்திய அணுசக்தி பொறுப்பேற்பு சட்டம் மற்றும் அணுசக்தி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டத்தை அறிவித்தாா். இதற்கு, இரு தலைவா்களின் போச்சுவாா்த்தையின்போது அமெரிக்கா தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
பங்களாதேஷ் விவகாரத்தை பிரதமா் மோடியை கையாள்வாா் என்று டிரம்ப் தெரிவித்தாா். இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘நீண்ட காலமாக பங்களாதேஷ் விவகாரத்தை இந்தியாதான் கையாண்டு வருகிறது. வங்கதேச பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு இல்லை. வங்கதேச பிரச்னையை பிரதமா் மோடியிடம் கேட்டறந்தேன். இதை அவரே கையாள்வாா்’ என்றாா்.
ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்த பங்களாதேஷ், இப்போது பாகிஸ்தானிடம் நெருக்கம் காட்டி வருகிறது. ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.