சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா

சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா

சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது முதல் எதிரியாகக் கருதாமல் இந்தியா அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆங்கில ஊடகத்துக்கு சாம் பித்ரோடா அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”முதல் நாளில் இருந்தே நமது மனப்பான்மை மோதல் போக்கை எதிர்கொள்வதைப்போன்றே உள்ளது. அது எதிரிகளை உருவாக்குகிறது. அது நாட்டில் குறிப்பிடத்தகுந்த ஆதரவு அலையையும் (ஆளும் கட்சிக்கு) ஏற்படுத்துகிறது. முதல் நாளில் இருந்தே சீனாவை எதிரியாகக் கருதும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என நினைக்கிறேன். இது சீனாவுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும்.

சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல் என்ன என்பது தெரியவில்லை. எதிரியை வரையறை செய்யும் பழக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு. அனைத்து நாடுகளும் ஒன்றிணையும் நேரம் நிச்சயம் வரும். கற்றுக்கொள்வதற்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் கூட்டு நடவடிக்கைகளுக்கும் நேரம் வரும்.

சீனா நம் அண்டை நாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வருகிறது. அதனை அங்கீகரித்து நாம் மதிக்க வேண்டும். மற்ற அனைத்து நாடுகளும் வளர்ச்சி அடையும். இந்த வளர்ச்சி சில நாடுகள் வேகமாகவும், சில நாடுகள் மெதுவாகவும் இருக்கும். மிகவும் ஏழ்மையாக இருப்பவர்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும்.

தன்னிறைவு அடைந்தவர்கள், மேம்பட்டவர்கள் வளர்ச்சி மெதுவானதாக இருக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதிர்ந்த மக்கள்தொகை இருக்கும். வளர்ச்சி அடைந்துவரும் நாட்டில் இளம் மக்கள் தொகையினர் இருப்பர். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான சாம் பித்ரோடாவின் இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் மற்ற மேம்பாடுகளையும் குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி பேசியிருந்ததைக் குறிப்பிட்டு பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். சாம் பித்ரோடாவின் கருத்தைக் குறிப்பிட்டு, சீனாவைக் கண்டு ராகுல் அச்சப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என பாஜக விமர்சித்துள்ளது.

இதையும் படிக்க | தலைப்பாகைகள் அகற்றம்… அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை!

முன்னதாக நிறப் பாகுபாடு குறித்து சாம் பித்ரோடா பேசிய கருத்து சர்ச்சையானது.

நாட்டில் கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியிலுள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கிலுள்ள மக்கள் கிட்டத்தட்ட வெள்ளையர்களைப் போலவும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Share This