
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்ட இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு உட்பட பல்வேறு தடைகள் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் இந்திய ஆடைகள் முக்கிய சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து செல்வாக்கு பெற்று வருவதை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும் சக்திவேல்
தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய வர்த்தகர்களை தாண்டி புதிய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம், அமெரிக்க சந்தையில்
பருவகாலம் மற்றும் சுங்க வரி தொடர்பான சவால்களை சமநிலைப்படுத்த உதவி செய்து, மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாது சந்தை அணுகல் தொடர்பான கடன் வசதிகள் போன்ற பிற வர்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளும் காலதாமதமின்றி அமல்படுத்தினால் ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்றும் அதன்மூலம் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகம் மேலும் அதிகாரிக்கும் என்றும் இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.
