செம்மணி மனிதப் புதைகுழி சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து

செம்மணி, சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்துக்கு எந்தவித தலையீடுகளற்ற சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
அத்தகைய சர்வதேச நீதி விசாரணைகளின்போது லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
செம்மணி மனித புதைகுழியில் இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவையென கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுவதாகவும் இதன்மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் சர்வதேச கண்காணிப்பு அவசியமென்பதை வலியுறுத்துவதுடன், சர்வதேச நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அத்துடன், செம்மணி அகழ்வாய்வுப்பணிகளுக்குரிய தொழில்நுட்பம்சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகார இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார் எனவும் துரைராசா ரவிகரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.