
புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 2,159.1 பில்லியன் ரூபா பணம் வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலரில் இதன் மதிப்பு 7,197.1 மில்லியன் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் புலம்பெயர் தொழிலாளர்களினால் வரலாற்றில் மிக கூடிய பணம் அனுப்புதலைப் பதிவு செய்ய முடியும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி நிலவரப்படி, 7,197 மில்லியன் அமெரிக்க டொலர் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் மட்டும் 673.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 நவம்பர் 30ஆம் திகதி நிலவரப்படி,புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,960 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை பணம் அனுப்புவதில் 20.1 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
