மன்மோகன் சிங் அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர் – பைடன் இரங்கல்
பதவி விலகவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரை உண்மையான அரசியல்வாதி என்றும் அர்ப்பணிப்புள்ள பொது ஊழியர் என்றும் பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முன்னோடியில்லாத அளவிலான ஒத்துழைப்பு மன்மோகன் சிங்கின் மூலோபாய பார்வை மற்றும் அரசியல் தைரியம் இல்லாமல் சாத்தியமில்லை என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில்
நேற்று முன்தினம் காலமானார்.
திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.