தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அதோடு வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி தோனி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிறகு என்ன திட்டங்களை வைத்துள்ளார்? என்பது குறித்து இதுவரை அவர் எந்த ஒரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபையான பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு தோனிக்கு மீண்டும் ஒரு முக்கிய பதவியை வழங்க காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற வேளையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார்.
அப்போதைய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அணியில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முக்கிய பொறுப்பினை தோனி சம்பளம் எதுவும் பெறாமல் செய்திருந்தார்.
ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ நிர்வாகம் அணுகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பதவியை தோனி ஏற்பாரா? இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவாரா? என்பது அவர் எடுக்கப்போகும் முடிவில் தான் இருக்கிறது.
ஏனெனில் ஏற்கனவே தோனிக்கும் கம்பீருக்கும் செட் ஆகாது என்று பேசப்படும் வரும் வேளையில் தற்போது பயிற்சியாளராக கம்பீர் இந்திய அணியில் இருக்கும் தருவாயில் தோனி எப்படி அணிக்குள் வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.