மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவை விசாரிக்கப்படுமாயின் நாமும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறிகையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் கடந்த காலங்களில் இந்த நாட்டிலே இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரும் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக இருப்பதனை தவிர்க்கும் நோக்கிலும்,

கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டும் என்று தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீண்டும் பேசுபொருளாக்கி எம்மை அரசியல் களத்தில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்று உள்ளூர விரும்புகின்ற பிரகிருதிகளும், இதன்மூலம் புலி ஆதரவு தரப்பினரை மகிழ்விக்க முடியும் என்று கணக்கு போடுகின்றவர்களும், தங்களுடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி எமக்கு எதிரான செயற்பாடுகளை, பிரசாரங்களை முன்னெடுத்து வருவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

அதற்காக, கடந்த காலங்களில் எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக இருந்து கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவதானித்து வருகின்றோம்.

தன்னுடைய வாழ்நாளையே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்காக அர்ப்பணித்து மானசீகமாக மக்களுக்காக உழைத்து வருகின்ற – தன்னை நோக்கி வருகின்ற சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் மிக்க தலைமைத்துவ ஆளுமையான தோழர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு செயற்படுகின்ற நாம் இவ்வாறான சமூக ஊடக பரபரப்புக்களை அலட்டிக்கொள்ளவில்லை.

எமக்கு எதிரான குற்றசாட்டுக்கள் அனைத்தும் அந்தந்தக் காலப் பகுதில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்கள் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Share This