வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின் ஆராய்ந்து சவால் விடுங்கள்

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்க்கட்சியினர் அது தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
பாதாள உலகக் குழு என்பது எங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று அல்ல, அரசியல் தொடர்புகளுடனேயே இவை ஆரம்பிக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன,
“தற்போது அரசாங்கம் குற்றம் சுமத்துபவர்களே பாதாள உலகக் குழுக்களை நிர்மாணித்தனர்.தற்போது பாதாள உலகக் குழுக்களிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அண்மைய தினங்களில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு காவல் துறையினரும் தொடர்புபட்டிருக்கின்றமை தெரியவருகிறது.எனினும், நிச்சயமாக இந்த நிலையை மாற்றுவோம்.” எனத் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தொடர்புகள் உள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்வயெழுப்பும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.