நீதியை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டி வரும்

நீதியை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டி வரும்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்கப்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லையெனில், நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, வெவ்வேறு தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கத்தோலிக்க திருச்சபைக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளனர் எனினும், அவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. “இந்த அமைப்பு மாற வேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டுவர இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆதரித்தோம், ஆனால் அது நடக்கவில்லை என்றால், எங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்,” என்று பேராயர் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அவர்கள் அமைதியாக இருக்கவில்லை என்றும், அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பேராயர்,

“நாங்கள் அதிகாரிகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துள்ளோம். இப்போது, ​​அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது, சரியான விசாரணை நடத்துவது, தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைத் திருத்துவது அவர்களின் பொறுப்பு.

நீதி மற்றும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். “அதை மறைக்கவோ அல்லது அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் சமரசம் செய்யவோ கூடாது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி வழங்குவதற்காக, குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.

“நீதி தாமதிக்கப்படாது என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர். இப்போது, ​​அவர்கள் தங்கள் வார்த்தையின்படி செயல்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்தில், தாக்குதல்கள்கள் இடம்பெற்று ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவோம். அதற்கு முன்னர் எங்களுக்கு நியாயமான பதில் கிடைத்தால், அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் இல்லையென்றால், மீண்டும் ஒருமுறை வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும்.” எனத் தெரிவித்தார்.

Share This