இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார்.

மூன்று நாள் அரச பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி,

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தமைக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார், மேலும் இது இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். ஜனாதிபதியாக, உங்கள் முதல் அரசு முறைப் பயணத்திற்கு நீங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த பயணத்துடன், எங்கள் உறவுகளில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாக்கப்படுகின்றன. எங்கள் கூட்டாண்மைக்காக, நாங்கள் ஒரு எதிர்கால தொலைநோக்கை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

“எங்கள் பொருளாதார ஒத்துழைப்பில், முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை வலியுறுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், “பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முக்கியமான தளம் என்று நம்புவதாகவும்” பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிந்தார்.

கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அவர் மேலும் வலியுறுத்தினார்.

“இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்களின் உறவுகள் நமது நாகரிகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார அழைப்பு விடுத்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

“இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கை நிலப்பரப்பை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், மேலும் இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்,” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share This