
தவறான கணக்கு போட்டுட்டேன் – விஜயிடம் கூறிய செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார்.
அதிமுக செங்கோட்டையன்
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 2009 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை செங்கோட்டையன் ஆவேசமாக சுட்டிக்காட்டினார். தனது காலக்கெடு குறித்து விளக்கமளித்த அவர், “பத்து நாட்களுக்குள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவேன்” என்று அறிவித்தார்.
மேலும், “தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன்” என கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். “அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு வளைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன் ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இன்று தவெகவில் இணையும் முன்நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் செங்கோட்டையன். கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் அவரின் பதவி பிரிக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாக ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு இடையே சபாநாயகர் அலுவலத்தில் நேற்று , செங்கோட்டையன் தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவுடன் நேரடியாகப் பேசியதுடன், மேலும் சில தி.மு.க. மூத்த உறுப்பினர்களுடன் தொலைபேசியிலும் உரையாடியுள்ளார்.
விஜய் செங்கோட்டையன் உரையாடல்
இதையடுத்து நேற்று செங்கோட்டையனை சந்தித்து விஜய் பேசினார். இருவருக்கும் இடையே பட்டினப்பாக்கம் விஜய் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது செங்கோட்டையன், தம்பி உங்க கட்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்கள் உங்களை பெரிய அளவில் மதிக்கிறார்கள். நீங்கள்தான் அடுத்த எதிர்காலம்.. திமுகவை எதிர்க்க சரியான கட்சி என்று நினைக்கிறார்கள் என்று கூறினார்.
இதற்கு விஜய்.. நீங்கள் நம்ம கட்சிக்கு வரக்கூடாது என்று திமுக, பாஜக உங்களிடம் பேசியாதாமே? என்று கேட்டுள்ளார்.
அதற்கு செங்கோட்டையன்.. ஆமாம் தம்பி பேசினார்கள். இரண்டு தரப்பிலும் பேசினார்கள். ஆனால் நான் போக விரும்பவில்லை. திமுகவை நான் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே எதிர்த்தவன் எப்படி போவேன். பாஜக அதிமுகவை இணைக்கும் என்று நம்பினேன். என் கணக்கு தவறாகிவிட்டது.
அதனால் அங்கேயும் சேரப்போவது இல்லை. உங்களை மக்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல பார்க்கிறார்கள் என்று செங்கோட்டையன் பேசி இருக்கிறார். செங்கோட்டையன் பேச்சை கேட்டு நேற்று விஜய் மனம் குளிர்ந்ததாக கூறப்படுகிறது.
