நான் உயிருடன் தான் இருக்கின்றேன் – நேரலையில் வந்தார் நித்தியானந்தா

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் – நேரலையில் வந்தார் நித்தியானந்தா

பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று அதிகாலை பேஸ்புக் நேரலையில் வந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்” என்று நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“இன்று, ஏப்ரல் மூன்றாம் திகதி, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசியாக வெளியிட்ட காணொளி பழையது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்

மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்.

பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன்.

எவ்வாறாயினும், அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்” என்றார். மேலும், இந்த காணொளி நேரலை தான் என்பதை உறுதிப்படுத்த யூடியூப் லைவில் கமென்ட் ஒன்றை அவர் படித்து காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This