பேஜர் தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன? – மொசாட்டின் திட்டம் அம்பலமானது
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் பேஜர், மற்றும் வாக்கி – டாக்கி குண்டுவெடிப்பு திட்டத்திற்கு பின்னால், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை முன்னாள் உளவாளிகள் வெளிப்படுத்தினர். சமீபத்தில் மொசாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு மூத்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில், பல ஹிஸ்புல்லா போராளிகள் பேஜர் மற்றும் வாக்கி – டாக்கி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயிரக்கணக்கான வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்களை இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்பதை உணராமல் எப்படி ஏமாற்றினார் என்று இரண்டு முன்னாள் மொசாட் முகவர்கள் கூறினார்கள்.
இந்த தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இது ஹிஸ்புல்லா உறுப்பினர்களை மட்டுமே குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பொதுமக்களும் இருப்பதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
இதனையடுத்து இரு தரப்பினர்களும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்த கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன.
முக்கியமாக ஹிஸ்புல்லாக்கல் இருக்கும் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததுடன், இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. மறு நாள் வாக்கி-டாக்கிகள் வெடித்து, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், இந்த தாக்குதலின் விபரங்களை சமீபத்தில் மொசாட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மைக்கேல் என்று பெயரிடப்பட்ட முகவர்களில் ஒருவர், மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகக் கூறினார்.
இது பொதுவாக அணிந்தவரின் இதயத்திற்கு அருகில் ஒரு ஆடையில் கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார்.
10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடம் இருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை “நல்ல விலைக்கு” ஹிஸ்புல்லா அறியாமல் வாங்கியதாக அவர் கூறினார்.
“இஸ்ரேலுக்கு எந்த தொடர்பும் இல்லாத வெளிநாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கான நம்பமுடியாத சாத்தியக்கூறுகள் எங்களிடம் உள்ளன” என்று மைக்கேல் கூறினார்.
“நாங்கள் ஒரு பாசாங்கு உலகத்தை உருவாக்குகிறோம். நாங்கள் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனம். நாங்கள் திரைக்கதை எழுதுகிறோம், நாங்கள் இயக்குனர்கள், நாங்கள் தயாரிப்பாளர்கள், நாங்கள் முக்கிய நடிகர்கள், மற்றும் உலகமே எங்கள் மேடை.”
இந்த செயல்பாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் ஹிஸ்புல்லா கோல்ட் அப்பல்லோ என்ற தைவானிய நிறுவனத்திடமிருந்து பேஜர்களை வாங்குவதைக் கண்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, தாய் நிறுவனத்திற்கு தெரியாமல் வெடிபொருட்களை கொண்ட பேஜர்களில் கோல்ட் அப்பல்லோ பெயரைப் பயன்படுத்தப்பட்டது.
மொசாட் வெடிமருந்துகளை உள்ளே வைத்ததாகவும், அது பயனரை மட்டுமே காயப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்றும் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
“குறைந்தபட்ச சேதம் இருப்பதை உறுதி செய்வதற்காக எல்லாவற்றையும் பலமுறை சோதனை செய்கிறோம்,” என்று கேப்ரியல் என்று அழைக்கப்படும் இரண்டாவது முகவர் தெரிவித்துள்ளார்.
மொசாட் குறிப்பாக ஒரு ரிங்டோனைத் தேர்ந்தெடுத்தது, உள்வரும் செய்தியை யாராவது சரிபார்க்கும் அளவுக்கு அவசரமாக ஒலிக்கும்.
பேஜர்களை வாங்குவதற்கும், விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்குவதற்கும், அவற்றை இணையத்தில் பகிர்வதற்கும் ஹிஸ்புல்லாவை ஏமாற்றியதாக கேப்ரியல் கூறினார்.
“அவர்கள் எங்களிடம் வாங்கும் போது, அவர்கள் மொசாட்டில் இருந்து வாங்குகிறார்கள் என்பதற்கான பூஜ்ஜிய துப்பு இல்லை,” என்று அவர் கூறினார். திரைக்குப் பின்னால் எல்லாம் எங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.”
செப்டெம்பர் 2024க்குள் கண்ணி வெடியில் சிக்கிய 5,000 பேஜர்களை ஹிஸ்புல்லா வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, பல்பொருள் அங்காடிகள் உட்பட பேஜர்கள் கொண்டு செல்லப்படும் எல்லா இடங்களிலும் வெடிப்புகள் நடந்தன.
மருத்துவமனைகள் உயிரிழப்புகளால் நிரம்பியதுடன் தாக்குல் காரணமாக பலர் ஊனமுற்றனர். இதன்போது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் முன்னால் மக்கள் பலியாகியதாக ஒரு “வலுவான தகவல்” இருப்பதாக கேப்ரியல் கூறினார்.
இந்த தாக்குதலில் இருந்து ஹிஸ்புல்லா இன்னும் மீளாத நிலையில், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் இலக்குகளுக்கு எதிராக தீவிர வான்வழித் தாக்குதல்களை தொடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.