
மலையக தியாகிகள் தினம் இன்று
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெற்றது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் காலை 9 மணிக்கு பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமர்சல் வளாகத்தில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து அமைச்சின் உறுப்பினர்கள், சிவில் அமைப்பு மற்றும் அரசியல் இயக்கங்களின் பிரிதநிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
1939 டிசம்பர் இறுதியல் ஆரம்பமாகி 1940 ஜனவரிவரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.
1940 ஜனவரி 10 ஆம் திகதி முல்லோயா கோவிந்தன் உயிரிழந்திருந்ததுடன், அதன் பின்னர் தொடர்ச்சியாக மலையக பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களால் பலர் உயிரிழந்தனர். இதனால் முல்லோயா கோவிந்தன் உயிரிழந்த தினத்தை மலையக தியாகிகள் தினமாக தொடர்ச்சியாக மலையக மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
மலையக தியாகிகள் தினம் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் இன்று நினைவுகூரப்பட்டு வருகிறது.


