ஊழல் குற்றச்சாட்டில் உயர்மட்ட அதிகாரிகள், இராணுவத்தினர் நீக்கம்

ஊழலுடன் தொடர்புடைய கடும் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் மட்ட அதிகாரிகள் இருவரும் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் ஏழு பேரும் இராணுவத்தில் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் இரண்டாவது உயர்மட்ட ஜெனரலான ஹீ வெய்டோங்வும் இராணுவத்தின் முன்னாள் உயர்மட்ட அரசியல் அதிகாரியான கடற்படை அட்மிரல் மியாவ் ஹுவாவும் இவ்வாறு நீக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய அதிகாரிகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலாச்சாரப் புரட்சிக்குப் பிறகு மத்திய இராணுவ ஆணைக்குழுவில் தளபதி பதவி வகித்த நிலையில் பதவி நீக்கப்படும் முதல் தளபதியாக ஜெனரல் ஹீ இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுவெளியில் காணப்படாத போதிலும் அவர் மீதான விசாரணைகள் குறித்த விபரங்களையும் அதிகாரிகள் முன்பு வெளியிடவில்லை.
இவ்வாறான நிலையில் ஜெனரல் ஹீ, அட்மிரல் மியாவ் மற்றும் ஏழு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டமை தொடர்பான அறிவிப்பில், கட்சி ஒழுக்கத்தைத் தீவிரமாக மீறியதாகவும், மிகப் பெரியளவிலான பணத்தை உள்ளடக்கிய கடமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஜாங் சியாவோகாங், ‘இவர்கள் மீது கூறப்படும் குற்றங்கள் மிகவும் கடுமையானவை, மிகுந்த தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் கொண்டவை. இந்நடவடிக்கை கட்சி மற்றும் இராணுவத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்’ என்று கூறியுள்ளார்.