நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு

நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு

நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் விழுந்த மரத்தை நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து அதை அகற்றும் வரை, நேற்று பிற்பகல் 1:00 மணி முதல் 2:00 மணி வரை சுமார் 1 மணித்தியாலயம் போக்குவரத்து தடைபட்டிருந்தது.

அத்தோடு, பகுதியளவு சேதமடைந்த வீட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

வீசும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மற்றும் இணை வீதிகளிலும் வாகன சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இன்று காலை கொட்டகலை டிரேட்டன் கொலனி பகுதியிலும் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முழுமையாக சேதமமைந்துள்ளது.

இதேவேளை, பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று அதிகாலை 1:00 மணி முதல் கினிகத்தேனை-நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் 33,000 வாட் உயர் மின்னழுத்த மின்கம்பி கொண்ட ஒரு மின்கம்பம், மரங்கள் மற்றும் பல பாறைகள் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹ_லாங்வங்குவ எனும் பகுதியில் இந்த மரங்களும் மின்கம்பிகளும் விழுந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில், வீதியின் போக்குவரத்து சீரடையும் வரை ஹட்டன் வீதியின் ஊடாக வாகனங்களை ஓட்டுமாறு நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நோர்டன்பிரிட்ஜ் முதல் கினிகத்தேனை வரையிலான உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு சரிந்ததால், நோர்டன்பிரிட்ஜ் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, காசல்ரீ பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, ஹட்டன்-நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் பல இடங்களில் பல பெரிய மரங்கள் விழுந்துள்ளதாகவும், இதனால் இன்று (30) காலை 9:00 மணி முதல் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெதண்டி தோட்ட பகுதியில் மரம் விழுந்துள்ளதாகவும், மின்சார சபை ஊழியர்கள் விழுந்த மரங்களை வெட்டத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வீதியில் விழுந்த மரங்களை வெட்டப்படும் வரை வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
இதேவேளை, நோர்டன்பிரிட்ஜ் மின்சார சபையின் ஊடாக வழங்கப்படும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதன் காரணமாக ஹட்டன் வெலிஓயா தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள சுமார் 300 குடும்பங்கள் மோசமான வானிலை காரணமாகவும், மின்சாரம் இல்லாததாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள ஹட்டன் வெலிஓயா பகுதி மக்கள், பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார இணைப்பு உடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக தங்கள் தோட்டத்தில் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் கூறுகின்றனர். நோர்டன் பிரிட்ஜ் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டிகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் பல கோழிப்பண்ணைகளை இயக்க முடியாமல் இருப்பதாகவும், குளிர் காலநிலையால் பல விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக நோர்டன் பிரிட்ஜ் மின்சார வபையின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )