
பிரித்தானியாவி பல பகுதிகளில் கன மழைபெய்யும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியாவில் மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலை நிலவுவதால், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் இன்று மஞ்சள் எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரவு முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை வரை வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய முன்னறிவிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லங்காஷயர், நார்தம்ப்ரியா மற்றும் கவுண்டி டர்ஹாமின் சில பகுதிகள் மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளை உள்ளடக்கிய இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்தின் சில கடலோரப் பகுதிகளிலுக்கு மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற வானிலைக்கு வடக்கு அட்லாண்டிக்கிலிருந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பலத்த காற்று வீசும் எனவும், குறிப்பாக மரங்கள் மற்றும் கிளைகள் விழுந்து ரயில்வே வீதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அலுவலக துணை தலைமை வானிலை ஆய்வாளர் டான் ஹோலி தெரிவித்துள்ளார்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், புதுப்பித்த தகவல்களை அவ்வப்போது வழங்கவுள்ளதாகவும் டான் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.
