
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் அவதானம்
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் இன்று (06) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது.
இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது.
மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை நீடித்துள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருகைத் தரும் புதிய வாகன சாரதிகள் தமது வானத்தின் முன்பக்க விளக்குககளை ஒளிரச்செய்து அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டுமென்று போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை நுவரெலியாவில் கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.
இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
