
அலெப்போவில் கடும் மோதல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பின்வாங்க மறுத்த சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) போராளிகளுடன், சிரிய இராணுவம், அலெப்போ நகரில் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளது.
நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களைத் தேடி தப்பி ச் சென்றுள்ளதாக அலெப்போவின்(Aleppo) அவசரகாலத் தலைவர் முகமது அல்-ரஜாப் தெரிவித்துள்ளார்.
ஷேக் மக்சூத் பகுதியில் சிரிய இராணுவம் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், தற்போது அந்தப் பகுதியின் சுமார் 55 சதவீதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, SDF போராளிகள் நடத்திய தாக்குதலில் சுமார் மூன்று சிரிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறம், அலெப்போவின் கிழக்கே உள்ள டெய்ர் ஹஃபர் பகுதியில் 10 வயது சிறுமி உயிரிழந்த பீரங்கித் தாக்குதலை, அரசாங்கத்துடன் இணைந்த ஆயுதப் பிரிவுகள் நடத்தியதாக SDF குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்ததிலிருந்து, பொதுமக்கள் உட்பட சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
