மின் தடை – ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது

மின் தடை – ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது

மின் தடை காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக விமான நிலையம் “மின் தடையை” சந்தித்து வருவதாக ஹீத்ரோ விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, மார்ச் 21 அன்று 23:59 வரை ஹீத்ரோ விமான நிலையம் மூடப்படும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து “பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருவதாகவும்.” தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள நிலையில், மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பு என்று அறிவிக்கப்படவில்லை.

எனினும், நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடிந்தவரை கடினமாக உழைத்து வருவதாக ஹீத்ரோ விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஹீத்ரோ இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும், இது ஒவ்வொரு நாளும் சுமார் 1,300 விமானங்களை கையாளுகிறது. கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்தின் வழியாக 83.9 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This