மேர்வின் சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியரசர் சஹன் மாபா பண்டார நேற்று திங்கட்கிழமை (28) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக, இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர் .இது குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலே,விசாரணையை ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.இதன்போது பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கை முழுமையாக விசாரணைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனை கருத்திற்கொண்ட நீதியரசர் , இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில், கடந்த மார்ச் 05ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 03 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.