வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.

வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும்.

முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார்.

Share This