இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை

உண்மையைப் பேசுபவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு வாக்களிக்க தோட்டப் பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அம்பகமுவ பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹட்டன் அபோட்ஸ்லி தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை பெருந்தோட்டத் துறையில் மக்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“ஏனைய கட்சிகள் வழங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என்று மட்டுமே விமர்சிக்கிறார்கள்.

நான் இராஜாங்க அமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த காலத்தில், எனக்குக் கிடைத்த ஒதுக்கீடுகளைக் கொண்டு தோட்டப் பகுதி மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபட்டேன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தலவாகலையில் கூறினார். ஆனால், சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எப்போதும் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This