துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா? புகைப்படங்கள் வெளியாகின
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வசதிகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிறைச்சாலை திணைக்களம், துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வரும் விடுதியில் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையின் விடுதி இலக்கம் 3 இல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க கூறுகிறார்.
துமிந்த சில்வாவை முதலில் சிறைச்சாலைக்கு மாற்றிய போது சிகிச்சை அளித்த விசேட வைத்தியரின் ஆலோசனையின் பேரில் துமிந்த சில்வாவை மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்குமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் பரிந்துரை செய்ததாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா தற்போது சிறை வைத்தியர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
மேலும், துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை மதிப்பிடுவதற்கு மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைத் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கடந்த காலங்களில் துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் வழங்கப்படுவது தொடர்பில் விமர்சனச் செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்தச் செய்தி வன்மையாக நிராகரிக்கப்பட்டதாகவும், இந்தக் கைதிக்கு அவ்வாறான விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க வலியுறுத்துகின்றார்.
இவ்விடயம் குறித்து அறிய இரண்டு முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இட ஆய்வுகள் மற்றும் முதற்கட்ட விசாரணை அறிக்கைகளின்படி, குறித்த கைதிக்கு தனியான கழிவறையோ அல்லது விசேட வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.