கெஹெல்பத்தர பத்மேவுடன் ஹரக் கட்டாவின் மனைவி மலேசியாவில் கைது

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மந்தினு பத்மசிறி என்ற கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பாதுகாப்பு படையினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கெஹெல்பத்தர பத்மேவுடன் சட்டத்திற்கு புறம்பான உறவில் உள்ள பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் குழந்தையும் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்ஜீவ என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் படுகொலையை திட்டமிட்டவர் என சந்தேகிக்கப்படுகிறார்.
கனேமுல்லா சஞ்சீவ கொலைக்குப் பிறகு பத்மே துபாயிலிருந்து மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கைது தொடர்பாக இலங்கை புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே தகவல் அறிந்திருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி இந்தக் கைது நடவடிக்கையில் உள்ளடங்கியிருக்கிறாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
இந்தக் கைதுகள் தொடர்பாக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸாரிடம் உத்தியோகபூர்வ தகவல்களை விசாரித்து வருகின்றனர்.
தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.