ட்ரம்பின் போர் நிறுத்தத்தை ஹமாஸ் தரப்பு நிராகரிப்பு

காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான வாயில் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு ட்ரம்ப் பரிந்துரைத்திருக்கும் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதோடு நேற்று (02) காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 43 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ட்ரம்பின் பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இடையே இடம்பெற்ற நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கை எட்டப்பட்டதாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் இறுதி முன்மொழிவு ஒன்று ஹமாஸிடம் கையளிப்பதற்கு எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களிடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறி வரும் ஹமாஸ் அமைப்பு இந்த போர் நிறுத்த திட்டத்தை ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தீவிரமாகவும் தயாராகவும் இருப்பதாக ஹமாஸ் அதிகாரியான தஹிர் அல் நுனு ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ‘போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வழிவகுக்கும் எந்த முயற்சியையும் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த போர் நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக எகிப்து அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒருசில தினங்களாக காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்து வரும் ட்ரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இணங்கும்படி ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி இருந்தார். இந்த 60 நாள் காலப்பகுதி போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுக்க பயன்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
மறுபுறம் காசாவில் தொடரும் தாக்குதல்கள் மற்றும் முற்றுகைக்கு மத்தியில் தற்காலிக போர் நிறுத்தமே ஆறுதலை தரும் என்று அங்குள்ள மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். ‘இரண்டு மாதங்களாக இருந்தாலும் கூட அது இந்த முறை நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன். அது ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை காக்க உதவும்’ என்று காசா நகர குடியிருப்பாளரான கமால் என்பவர் தொலைபேசி மூலம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
காசாவில நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் 43 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 250 பலஸ்தீனர்கள் பலியாகி இருப்பதாக காசா மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதில் கணிசமானவர்கள் உதவிக்காக காத்திருந்த நிலையில் கொல்லப்பட்டவர்களாவர். இதில் கான் யூனிஸ் நகரின் அல் மவாசி பகுதியில் அடைக்கலம் பெற்ற மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய செல் குண்டு தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அதே பகுதியில் கூடாரங்கள் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
மத்திய காசா நகரின், ஜபால் வீதியில் இருந்த வீட்டின் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் தந்தை அஹமது ஐயாத் சினோ, மனைவி அயாத், அவர்களின் இரு மகள்களான சாரா மற்றும் ஒபைதா ஆகிய சினோ குடும்பத்தின் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வீடும் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் அங்குள்ள இந்தோனேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மர்வான் அல் சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா நகரில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசா தொடர்பில் தகவல்களை பெறுவதில் மர்வான் அல் சுல்தான் முக்கிய மூலமாக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 56,647 ஆக அதிகரித்திருப்பதோடு 134,105 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.