இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு

தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலின் ஆறு நாள் இராணுவ நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், போராளிக்குழு அதிகாரிகள் இந்த தகவலை அறிவித்துள்ளனர்.

கான் யூனிஸ் மீதான வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனக் குழுவின் அரசியல் அலுவலக உறுப்பினரான பர்தவீல் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆதரவு ஊடகங்கள் தெரிவித்தன.

இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஹமாஸ் தலைமையின் ஊடக ஆலோசகர் தாஹர் அல்-நோனோ, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் பர்தவீலின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

17 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரண்டு மாதங்களாக அமைதி நிலவிய பின்னர், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை கைவிட்ட பிறகு, செவ்வாயன்று ஹமாஸுக்கு எதிராக முழுமையான வான் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காசா மக்கள் மீண்டும் தங்கள் உயிருக்காக தப்பி ஓடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

இஸ்ரேலிய விமானங்கள் அந்தப் பகுதிகளில் பல இலக்குகளைத் தாக்கியதால், செவ்வாய்க்கிழமை தொடங்கிய தாக்குதலின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இதுவரை ரஃபா மற்றும் கான் யூனிஸ் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Share This