துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு

சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக பொலிஸார் அறிவித்திருந்தனர். 50 வயதான தந்தை மற்றும் 24 வயதான மகனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

24 வயதான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்ததாக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தாக்குதலின் போது அவரது தந்தை சஜித் கொல்லப்பட்டார். இந்நிலையில், நாட்டின் தேசிய அமைச்சரவை துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியான ஊடகங்களிடம் இன்று பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் தற்போது, நான்கு  மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது போர்ட் ஆர்தர் படுகொலை நடந்த நேரத்தில் இருந்ததை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய  மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன.

இதன்ஓர் அங்கமாகவே துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ள மேலதிக துப்பாக்கிகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலக்கு வைத்தே குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த போர்ட் ஆர்தர் (Port Arthur) படுகொலை சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

அதன்பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )