பங்ளாதேஷில் கையெறி குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்

பங்ளாதேஷில் கையெறி குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்

முன்னாள் பிரதமர் கலிடா சியா பேகத்தின் மகனும் தேசியவாதக் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான்  இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 25) காலை விமானத்தில் டாக்கா வந்திறங்கினார்.

அதற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (டிசம்பர் 24) இரவு தலைநகரின் மொக்ஹபசார் பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஒரு கையெறி குண்டு அடையாளம் காணப்படாதவரால் வீசப்பட்டதென்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த இடத்தில் ‘பங்ளாதேஷ் முக்திஜொத்தா சங்சத்’ என்ற 1971ஆம் ஆண்டு நடந்த பங்ளாதேஷ் விடுதலைப் போரட்ட வீரர்களின் மத்திய அலுவலகம் அமைந்துள்ளது.

பாலத்தின் கீழே உள்ள சாலையோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஒரு தனியார் கடை ஊழியர், குண்டு வீசப்பட்டபோது படுகாயமடைந்தார். சியாம் என்ற பெயருடைய அந்த 20 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று அப்பகுதி காவல்துறை அதிகாரி முஹம்மது முஹியுடின் தெரிவித்தார்.

பங்ளாதேஷில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இரண்டு முறை பிரதமராக இருந்த கலிடா சியாவின் 60 வயது மகன் தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவியை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

அவர் தேசியவாதக் கட்சியின் (BNP) தற்காலிகத் தலைவராகவும் இருக்கிறார். நாடுகடந்து 17 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்தபிறகு கட்சியை வழிநடத்த அவர் தன் மனைவி, மகளுடன் பங்ளாதேஷ் திரும்பியுள்ளார்.

அவரை வரவேற்க மில்லியன் கணக்கில் ஆதரவாளர்களை கட்சி திரட்டி வருகிறது. திரு முஹம்மது யூனோஸ் தலைமையிலான பங்ளாதேஷின் தற்காலிக அரசாங்கம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே பங்ளாதேஷ் தற்காலிக அரசாங்கத்தின் உள்துறை விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் குடா பக்ஸ் சௌத்ரி பதவி விலகியுள்ளார். அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் தலைவர் ஒஸ்மான ஹாடியின் மரண விசாரணை திருப்திகரமாக இல்லாத நிலையில் இந்த பதவி விலகல் இடம்பெற்றது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )