தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தலைவர்களாகவும், தொழில்முயற்சியாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் பெண்கள் முன்னேறக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை அகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மற்றும் சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) இணைந்து ஏற்பாடு செய்த ஐக்கிய இராச்சியத்தின் She Trades Commonwealth+ நிதியத்தால் முன்னெடுக்கப்படும் She Trades Sri Lanka Hub நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரிய தலைமையில் கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
தேசிய அபிவிருத்தியில் பெண்களின் முக்கிய பங்கை அடையானம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளை அகற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. பாலினத்தை உள்ளடக்கிய கொள்கைகள், நிதி உள்ளீர்ப்பு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்கள் தலைமையிலான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், விவசாய வர்த்தகம் மற்றும் பொறியியல் துறைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முயற்சியானர்களான பெண்களுக்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதன் மூலம், பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சி தொடர்பான அறிவு, இணையத்தள பயிற்சி மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், நிலையான சந்தையை உருவாக்குதல் ஆகியவை முக்கிய மூலோபாயங்களாகும்.
பெண்களுக்கு தேவையான திறன்கள், நிதி வளங்கள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான அணுகல் ஆகியவற்றைக் கொண்டு பெண்களை உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் நிலையான அபிவிருத்தியின் மூலம் பெண்களை பொருளாதார அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற்ற அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமேலி கோக்-ஹமில்டன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. மங்கள விஜேசிங்க, சர்வதேச வர்த்தக நிலையம் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச வர்த்தக நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.