GovPay மூலம் தென் மாகாணத்திலும் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்

GovPay மூலம் தென் மாகாணத்திலும் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்

தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி தற்போது மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தையும் உள்ளடக்கியுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தென் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் அந்த மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 400க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் இந்த முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதியை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் இரண்டாம் கட்டம் அதன் பிறகு செயல்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர், இந்த நடவடிக்கைக்காக தபால் திணைக்களம் மற்றும் போக்குவரத்துத் திணைக்களமும் இந்த செயல்முறையுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், Gov Pay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் செயல்பாட்டில் மேல் மாகாணம் அதிக அபராதத் தொகையை வசூலித்துள்ளதாகவும், இதுவரை சுமார் 20,000 போக்குவரத்து மீறல்களிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாய் போக்குவரத்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து, இதில்170 நிறுவனங்கள் இணைந்துள்ளதாகவும், இந்த Gov Pay முறை மூலம் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு 400 மில்லியன் ரூபாய்க்கு மேல் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Share This