நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்புக்கு ஆளுநர் வேதநாயகன் பாராட்டு

எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும்தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டினார் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்.
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் இன்று சனிக்கிழமை காலை (23.08.2025) அமைப்பின் இணைத்தலைவரும் முன்னாள் பிரதம செயலருமான இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பண்பாட்டு கலைக்கூடலின் மாணவர்களால் பண்ணிசை, கோலாட்டம் என்பன நடத்தப்பட்டன. அத்துடன் யாழ்ப்பாணம், வலிகாமம் வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதனின் ‘பொழிலும் பொலிவும்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. காலைக்கதிர் பத்திரிகைக்கு செல்வழி நயனம் விருதும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஆசி இயம்பல் வழங்கிய கலாநிதி ஆறு.திருமுருகன் தனதுரையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. ஆலயச் சூழலுக்கு மணல் பெற்றுக்கொள்வதை சிலர் தடுத்திருக்கின்றார்கள். வேதனையான விடயம். எதிர்காலத்தில் மணல் வழங்கமாட்டோம் என்று பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது. நல்லூரானுக்கு மணல் வழங்காமல் இருப்பதற்கு தமிழ் மண்ணிலுள்ள தமிழர்களின் பிரதேச சபை தீர்மானித்திருக்கின்றது. இது ஓர் அபசகுணமான செயற்பாடு. எல்லாவற்றையும் நல்லூரான் பார்த்துக்கொள்வான் என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது உரையில், ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது. ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது. 5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள்.
இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள். ஆறு.திருமுருகன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதைப்போல மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலே உலகம் எங்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்தோம் என்று பெருமை கொள்ளுவதற்கும் அந்த நல்லூரே காரணமாக இருக்கின்றது.
இன்று சைவத்துக்கும், தமிழுக்கும் பல தரப்புக்களாலும் உள்ளக, வெளியக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த அழுத்தங்களிலிருந்து சைவத்தையும், தமிழையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வாறான அமைப்புக்கள் காலத்தின் தேவையாக சேவையாற்றுகின்றன, என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.