வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை – ஆளுநர் வேதநாயகன் வேதனை

வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை – ஆளுநர் வேதநாயகன் வேதனை

ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்குக் கேட்காத நிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார்.

‘தர்மம்’ அமைப்பின் ஏற்பாட்டில் செவிப்புல சவால் உடையோரின் சைகைமொழி உரிமை மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

‘இலங்கையில் சைகை மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும், அரச நிறுவனங்களை இலகுவாக அணுகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்ட இந்த நிகழ்வில், இது தொடர்பான கோரிக்கை மனுவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இங்கு நீங்கள் திரண்டிருப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றீர்கள் என்பதை உணர முடிவதாகக் குறிப்பிட்டார்.

உங்களின் குரல்கள் மாத்திரமல்ல ஏழைகளின் குரலும் அரச திணைக்களங்களிலுள்ளவர்களால் கேட்கப்படுவதில்லை என ஆளுநர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பேன் என்று குறிப்பிட்ட ஆளுநர், மாற்றாற்றலுடையோர் நிவாரணங்கள் கேட்டு வருவதில்லை மாறாக தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கே விரும்புகின்றனர் என்பதை தான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதாகக் கூறினார்.

தான் மாவட்ட செயலராகக் கடமையாற்றிய காலத்தில் அங்கு சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருந்தமையால் உங்களில் பலரின் தேவைகளை தன்னால் இலகுவாக நிறைவேற்ற முடிந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவ்வாறான ஒருவர் ஏனைய திணைக்களங்களிலும் இருந்தாலும் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தர்மம் அமைப்பின் நிறுவுநர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share This