மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும் அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் – ஆளுநர் கவலை

மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும் அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் – ஆளுநர் கவலை

“வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாகப் பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களைப் பழிவாங்கும் – அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை, எங்கள் மாகாணத்தை நாங்கள் எல்லோரும் இணைந்துதான் உயர்த்த வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் ‘வடந்தை’ நூல் வெளியீடும் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னார் பாலத்திலிருந்து அதிதிகள் கலை ஆற்றுகைகளுடன் பேரணியாக விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில்,

“தமிழர்களின் மிக முக்கியமான பண்பாடு விருந்தோம்பல். அதை நாம் இன்று மறந்து செல்கின்றோம். அவ்வாறு நாங்கள் மறந்து செல்பவற்றை நினைவூட்டத்தான் இவ்வாறான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இந்தப் பண்பாட்டு பெருவிழாவுடன் இணைந்ததாக நடத்தப்படுகின்ற  கண்காட்சியைப் பாராட்டுகின்றேன். அந்த ஆக்கங்களை இளையோரே செய்திருக்கின்றார்கள். அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கின்றது.

எமது சுற்றாடலை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் சிறுவயதிலிருந்தே பழக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக ஒரு பாடவேளையை ஒதுக்குவது தொடர்பில் அமைச்சின் செயலருடன் கலந்துரையாடவிருக்கின்றேன். வீதிகளில் குப்பைகளை வீசி எமது மாகாணத்தை அசிங்கமாக்குவதில் அநேகர் படித்தவர்கள்தான்.

மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் நான் இருந்தபோது கூட இவ்வாறு பொதுமக்கள் சந்திப்பதற்கு வரவில்லை. சின்ன விடயங்களுக்கும் இப்போது ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள்.

அந்தப் பொதுமக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள அரச திணைக்களங்களில் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று வருகின்றார்கள்.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமை (16) இரவு 8 மணியைத் தாண்டியும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்திருந்தேன்.

முன்னைய காலத்தில் குறைந்தளவு பணியாளர்களுடன் மக்களுக்கு திறம்பட சேவைகள் வழங்கப்பட்டன. இப்போது அதிகரித்த ஆளணி மற்றும் கணினி வளங்கள் இருந்தாலும் மக்களுக்குச் சிறப்பான சேவைகள் வழங்கப்படவில்லை.

மக்கள் தமது பிரதேச அல்லது கீழ்நிலை அலுவலர்களின் ஊடாக ஒரு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என மேல்நிலை அலுவலர்கள் அல்லது திணைக்களத் தலைவர்களிடம் சென்றால், அந்த மக்களுடன் எரிந்து விழுந்து அவ்வாறு ஏன் சென்றீர்கள் எனக் கேட்டு, அந்தச் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க மறுக்கின்ற கீழ்நிலை அலுவலர்கள் இப்போது இருக்கின்றார்கள். இவர்களால் எப்படி இப்படிச் சொல்ல முடிகின்றது? இவர்களின் மனநிலையை நினைத்து கவலையடைகின்றேன்.” – என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், மன்னார் மாவட்ட செயலர் க.கனகேஸ்வரன், நாட்டுக்கூத்து கலைஞர் கலாபூஷணம் செ.மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இளங்கலைஞர் விருதை 10 பேரும், கலைக்குரிசில் விருதை 13 பேரும், சிறந்த நூல்களுக்கான விருதை 14 பேரும் பெற்றுக்கொண்டனர்.

Share This