அநுரவின் அரசாங்கத்திலும் வடக்கில் இராணுவ மயமாக்கல் – புலம்பெயர் தமிழர்கள் கண்டனம்

அநுரவின் அரசாங்கத்திலும் வடக்கில் இராணுவ மயமாக்கல் – புலம்பெயர் தமிழர்கள் கண்டனம்

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புகள் கடந்த காலத்தில் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழும் இந்த நடவடிக்கை ஆழமடைந்து வருவதாக புலம்பெயர் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

”மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான நம்பிக்கைகள் இருந்தபோதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஸ்தாபனங்களாக மாறுவேடமிட்டு புதிய “தடுப்பு மையங்கள்” என நிறுவப்படுவது வேறுவிதமாக சமிக்ஞை செய்கிறது.

கடந்த 30ஆம் திகதி இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபாலவின் கையொப்பத்துடன், வெளியான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முல்லைத்தீவு விமானப்படைத் தளம் “தடுப்பு மையமாக” அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள்  31ஆம் திகதிமுதல் இதன் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்த விடயம் அப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

முல்லைத்தீவு கடலில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்ட 103 மியான்மர் அகதிகள் ஏற்கனவே தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், அங்கு போதிய வசதிகள் இல்லாததால் முல்லைத்தீவுக்கு மாற்றப்பட்டனர். தமிழர் தாயகம், மக்களின் விருப்பத்தையும் நலனையும் புறக்கணித்து, அரச கொள்கைகளுக்கான கருவியாக வடக்கு, கிழக்கு நிலப்பரப்பு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த முடிவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மாறாக இந்த முகாம்கள் போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களாகவும் தடுப்பு காவல் நிலையமாகவும் மீண்டும் உருவாக்கப்பட்டு தமிழ் மக்களை மேலும் ஓரங்கட்ட அரசாங்கம் முற்படுகிறது.

இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி வரலாற்று அநீதிகளை நிவர்த்தி செய்யும் அரசாங்கத்தை எதிர்பார்த்து அண்மைய தேர்தல்களில் ஜே.வி.பி.யை ஆதரித்த தமிழர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். மாறாக, தமிழர்களின் உரிமைகளையும் இறையாண்மையையும் நீண்டகாலமாக மறுத்த அதே அடக்குமுறை உத்திகளின் தொடர்ச்சியையே நாம் காண்கின்றோம்.

சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறும், தமிழர் பிரதேசங்களை இராணுவமயமாக்குவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் மேலோங்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share This