சர்வதேச ஆய்வு கப்பல்களுக்கு அனுமதியளிக்க ‘தேசிய கொள்கை’ வகுக்கப்படும் – விசேட குழுவை நியமிக்கும் அரசாங்கம்

சர்வதேச ஆய்வு கப்பல்களுக்கு அனுமதியளிக்க ‘தேசிய கொள்கை’ வகுக்கப்படும் – விசேட குழுவை நியமிக்கும் அரசாங்கம்

இலங்கைக்கு வருகைதரும் சர்வதேச கப்பல்களுக்கு அனுமதியளிக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், குறித்த கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது,

”இலங்கைக்கு வருகைதரும் ஆய்வு கப்பல்கள் தொடர்பில் தெளிவாக எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாகும் வகையிலான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது. ஆய்வு கப்பல்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று அவசியமாகும். தேசிய கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆய்வு கப்பல்கள் மாத்திரம் அல்ல இலங்கைக்கு வருகைதரும் அனைத்து கப்பல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது தொடர்பில் ஆய்வுகளை நடத்தி சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பு இந்த குழுவுக்கு வழங்கப்படும். அதன் பிரகாரம் தான் எதிர்காலத்தில் நாம் செயல்படுவோம்.

இந்தியா அதன் கடல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொண்டுள்ளது. நாமும் அதனை உறுதியளித்துள்ளோம். இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எந்தவொரு தீர்மானத்தை இலங்கை எடுக்காது என்றும் உறுதியளித்துள்ளோம்.

டிசம்பர் 31 விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். குறித்த குழுதான் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும். சீன ஆய்வு கப்பல்கள் மாத்திரம் அல்ல அனைத்து கப்பல்களினதும் வருகையை அனுமதியளிக்கும் தேசிய கொள்கையே வகுக்கப்படும்” என்றார்.

 

Share This