தபால் ஊழியர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் நிபந்தனை – உடன்படாவிடின் பேச்சு இல்லை

கை விரல் அடையாளம் வைத்தல் மற்றும் தற்போதைய மேலதிக நேரக் கொடுப்பனவுக்கு உடன்பட்டால் மட்டுமே தபால் திணைக்களத்தின் வேலைநிறுத்தம் செய்பவர்களுடன் கலந்துரையாடல்களுக்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவ்வாறு கை விரல் அடையாளத்தை விரும்பாத ஊழியர்கள் வேலைவாய்ப்புக்காக வேறு இடத்தைக் தேடிக்கொள்ளுமாறும், தற்போதைய மேலதிக நேர ஊதியம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலதிக நேரக் கொடுப்பனவுகள் 2027 ஜனவரி மாதத்திற்குத் திட்டமிடப்பட்ட அடிப்படை சம்பள மட்டத்துடன் கணக்கிடப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனுடன் சம்பந்தப்பட்ட கொடுப்பனவு ¾ மற்றும் 5/6 தொடர்புடையதாக ஏப்ரல் மாதத்திலிருந்து கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மத்திய தபால் பரிமாற்றத்தில் மாத்திரம் இயக்கமின்மையை அவதானிக்க முடிவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மேலும் பல உப அஞ்சல் அலுவலகங்கள் திட்டமிட்டபடி இயங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.
அவ்வாறே வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் லீவு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வலியுறுத்திய அமைச்சர், அவர்களின் சம்பளம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது கடிதங்கள் மற்றும் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா, பொதுமக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.