வரி குறைக்கப்பட வேண்டும் என்ற ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பாரிய வரியை குறைத்து அனைத்து கல்வி பயனாளிகளுக்கும் நிவாரணம் வழங்குமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகளை பெறுவதற்கு அரசிடம் இருந்து நிதியுதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை மாத்திரம் அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அஸ்வெசும நலன்புரி பயனாளிகளுக்கு தலா 6,000 ரூபாயை 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வழங்க அரசாங்கம் தீர்மானித்த போது, இலங்கை ஆசிரியர் சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன், அரசின் இந்த தீர்மானத்தால், அத்தியாவசியமான மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது எனவும் சுட்டிக்காட்டியது.
“எங்களுக்குத் தெரியும். இலங்கையில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் நாற்பத்து மூன்று இலட்சம் பேர் உள்ளனர். இவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அஸ்வெசும பயனாளர்களாக உள்ளனர். ஆகவே அஸ்வெசும பயனாளர்களுக்கு மாத்திரம் வழங்கினால் அத்தியாவசியமான சிறுவர்கள் இதனை தவற விடுவார்கள். வரியை குறைக்க வேண்டுமென்பதே, பாடசாலை உபகரணங்கள் தொடர்பான தொடர்ச்சியான கோரிக்கையாகும்.”
2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நம்மைகள் கிடைக்காத ஏனைய தகுதியுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
“அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவர்கள், விசேட தேவையுடைய தாய் அல்லது தந்தையைக் கொண்ட குடும்பங்களின் மாணவர்கள், அனாதை இல்லங்களில் படிக்கும் வயதுடைய அனைத்து மாணவர்களுக்கும், விசேட காரணங்களால் ஆதரவற்ற நிலையிலுள்ள மாணவர்களுக்கும் கொடுப்பனவு வழங்குவதற்கான பொறுப்பு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.”
அந்த வகையைச் சேர்ந்த குடும்பங்களில் இருந்து மாணவர்களை தெரிவு செய்வதற்கான சரியான தரவு முறைமை தற்போது இல்லை என கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறெனினும், 2025ஆம் ஆண்டின் புதிய பாடசாலை தவணையின் ஆரம்பத்திலேயே உத்தேச எழுதுபொருட்களை வழங்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய ரீதியில் உள்ள மொத்த 10,096 பாடசாலைகளில், 300ற்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 6,576 பாடசாலைகள், நலன்புரி நிவாரணம் பெறாத குடும்பங்களைச் சேர்ந்த சகல பிள்ளைகளுக்கும், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பிரிவெனாக்களில் பயிலும் பௌத்த துறவற மாணவர்களுககும் தலா 6,000 ரூபாய் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், அந்த கொடுப்பனவை வவுச்சர் மூலம் வழங்குவதற்கும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் முன்வைத்த சோனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை உபகரணங்களுக்கான பாரிய வரிச்சுமையை நீக்குவதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாரிய நிவாரணம் கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
“பாடசாலை உபகரணங்களுக்கான வரியை குறைத்தால் பெரிய நிவாரணம் கிடைக்கும். ஏனென்றால் இது பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமல்ல, பல்கலைக்கழக மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் காணப்படுகின்றன. இந்த அனைத்து பொருட்களின் விலையும் மிகவும் உயர்ந்துள்ளது. அப்போது, இந்தக் கல்வி பயனாளிகளுக்கு இது கடும் சிக்கலாக மாறுகிறது. கல்வி உபகரணங்களில் விசேட கவனம் செலுத்துவதன் மூலம் மாத்திரமே இது நிவாரணமாக அமையும். எனவே, இந்த விடயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என நாங்கள் தெளிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.”
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தவாறு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் ஒன்றையும் நடத்தியது.
கல்விக்கு 6% ஒதுக்கு! 2025 வரவு செலவில் 3% ஆக்கு! போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 8ஆம் திகதி புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பிரதான கோரிக்கைளாக, “கொடுத்த வாக்கை நிறைவேற்று!, VAT ஐ அகற்றி பாடசாலை உபகர்ணங்கள்,சீருடை,கொப்பிகளின் விலையை குறை!” என்பன அமைந்திருந்தன.