
மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
போர் சூழல் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்களுடன் மிகவும் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கை முடிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்பப் பின்னணி அறிக்கைகளை ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்குவதற்கான புதிய பொறிமுறையொன்றை உருவாக்க பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தற்போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வுகாணவும் இதன்போது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும், எழும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளைக் காண்பதற்கும் ஒரு விசேட குழுவை நியமிக்கவும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
