கேப்பாப்பிலவு படை முகாமில் 103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு!

கேப்பாப்பிலவு படை முகாமில் 103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு!

கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக நேற்று மாலை 5  மணியளவில் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களை மிரிஹானவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதற்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் பிரகாரம் இவர்களை மிரிஹானவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் திருகோணமலையிலிருந்து அங்கு செல்வதற்கு வாகனங்களில் ஏற்றப்பட்டனர். எனினும், மிரிஹான தடுப்பு முகாமில் அவர்களை வைத்து பேணுவதற்கான வசதிகள், உரிய நிதி ஏற்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதனால் அவர்கள் இடைவழியில் திரும்பி திருகோணமலைக்குக் கூட்டி வரப்பட்டு, திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மீண்டும் நேற்று காலையில் அவர்கள் இரண்டு பஸ்களில் ஏற்றப்பட்டு மிரிஹானவுக்கு என அழைத்துச் செல்லப்பட்டனர். இடைவழியில் மிஹிந்தலை – ஹபரண பகுதியில் அவர்கள் பயணித்த பஸ்கள் இடைநிறுத்தப்பட்டன. மிரிஹானவுக்கு அவர்களை அழைத்து வர வேண்டாம் என்ற உத்தரவு பஸ் பொறுப்பாளர்களுக்குக் கிடைத்தது.

இதனையடுத்து திருகோணமலை துறைமுகப் பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் இன்று முற்பகல் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து, அந்த அகதிகளை முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தளக் கட்டளை அதிகாரியிடம் கையளிப்பதற்கான உத்தரவைப் பெற்றனர்.

அந்த உத்தரவுப் பத்திரம் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்து விரையப்பட்டு, ஹபரண பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அகதிகளின் பஸ்களின் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனையடுத்து அந்த அகதிகளை முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைத்திருப்பதற்காக அந்தப் படைத்த தள முகாம் கட்டளை அதிகாரியிடம் கையளிப்பதற்கு அவர்கள் நேற்று மாலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Share This