“கிளீன் ஸ்ரீலங்கா“ திட்டத்துக்கு சேறு பூச முற்படும் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான பத்திரிகை – அரசாங்கம் கண்டனம்
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று ஈடுபட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பாதையில் பலாக்காய் விற்க முடியாது, பாதையில் இலை கஞ்சி விற்றவருக்கு அத்துருகிரிய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என இந்த திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அன்றாம் உழைக்கும் மக்கள் மீது சட்டத்தை திணிக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதான தொனியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வெளிப்படுத்தும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாதையில் வியாபாரம் செய்பவர்களிடம் வரி வசூலிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க உள்ளதாக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இவ்வாறான கருத்துகளை தெரிவித்தாரா இல்லை என்பதற்கு அப்பால் இது முற்றிலும் திட்டமிடப்பட்டு சோடிக்கப்பட்ட பொய்யான செய்தியாகும்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் எவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யும் திட்டம் அல்ல. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் எவரையும் கைதுசெய்யுமாறு அரசாங்கம் எந்தவொரு ஆலோசனைகளையும் எவருக்கும் வழங்கவில்லை. நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறும் கூறவில்லை.
மக்களின் விம்பத்தை மாற்றியமைத்து அவர்கள் கௌரவமான மற்றும் செழிப்பாக வாழும் சூழலை உருவாக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டத்துக்கு சேறு பூசவும் அது தொடர்பில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கைகளை ஏற்படுத்தவும் பார்க்கின்றனர்.
இந்தப் பத்திரிகை கடந்த காலத்திலும் அரசாங்கத்துக்கு எதிரான பல செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூற தடையில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார் என செய்தி வெளியிட்டிருந்தது. அமைச்சர் ஆனந்த விஜேபால அவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியிருக்காத பின்புலத்தில் இவ்வாறு செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
நாட்டில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இவ்வாறு செய்திகளை வெளியிட்டிருந்தன் மூலம் மக்கள் குழப்பமடைந்திருந்தனர். இவ்வாறு பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்கு சொந்தமான பத்திரிகையே இது.
நாட்டு மக்கள் இடையே மீண்டும் இனவாதத்தை தூண்டி மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்கி தமது நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மக்கள் ஆணையானது இனவாதம், மதவாதத்துக்கு எதிரானது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தையும், சகவாழ்வையும் ஏற்படுத்தி அழகான வாழ்க்கையொன்றை ஏற்படுத்திக்கொடுப்பதற்கே வழங்கப்பட்டது.
அரசாங்கம் ஊடகச் சுதந்திரத்துக்கு ஒருபோதும் தடைகளை ஏற்படுத்தாது. ஜனநாயகத்தை முழுமையாக நாம் பாதுகாப்போம். ஆனால், இவ்வாறு தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் வகையில் ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் சட்டம், ஒழுங்குக்கும் தேசிய ஒருப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் அரசாங்கம் என்ற ரீதியில் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
கடந்த கால அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கவே எம்மை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். நாடு முன்னொக்கி பயணிக்க முற்படும் போது இவ்வாறு மூச்சை அடைக்க முற்படுவதை கண்டிக்கிறோம். அவ்வாறு செய்திகளை வெளியிடுபவர்களின் நிகழ்ச்சி நிரலை நாம் எதிர்காலத்தில் நாட்டுக்கு வெளியிடுவோம்.” என்றார்.