நாமல் எம்.பியின் தலையீட்டில் அரச பேருந்து ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் கடும் எச்சரிக்கை

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
அரச மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை புதிய கருத்து அல்ல என்றும், சில மாகாணங்களில் இந்த திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கால அட்டவணை தற்போது தென் மாகாணத்தில் செயல்பாட்டில் உள்ளதாகவும், அண்மையில் புத்தளம் (A5) வழித்தடத்திற்கு நீட்டிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணையை செயல்படுத்துவது இலங்கை போக்குவரத்து சேவையை பலவீனப்படுத்தாது என்றும் மைச்சர் குணசேன உறுதியளித்தார்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபையின் செயல்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளதாகவும், வரவிருக்கும் வரவுசெலவு திட்டத்தில் மேலும் ஒதுக்கீடுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
“தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், அது வெற்றிபெறாது எனவும், 90 சதவீத பேருந்துகளை இயக்க அமைச்சகம் தயாராக இருப்பதாகவும்” அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேருந்து செயல்பாடுகளை வலுக்கட்டாயமாக நாசப்படுத்தவோ அல்லது சீர்குலைக்கவோ முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அமைச்சர் வலியுறுத்தினார், மேலும் போக்குவரத்து சேவைகள் இடையூறுகள் இல்லாமல் தொடரும் என்று உறுதியளித்தார்.
அரச மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று இரவு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்கதக்து.