சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – அரசாங்கம் உறுதி
சிவப்பு அரிசிக்கு நாட்டில் நிலவும் தட்டுபாட்டை நீக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அரிசி தட்டுபாடு தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
”நாட்டில் அரிசிக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாகவே அரிசி இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியது. அரிசி இறக்குமதிக்கான கால எல்லை டிசம்பர் 30ஆம் திகதி முதல் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 ஆயிரம் மெற்றிக் தொன் துறைமுகத்தில் உள்ளது. அவையும் நாளை அல்லது நாளை மறுதினம் விடுக்கப்படும்.
குறிப்பிடத்தக்களவு அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும், அவற்றை விநியோகிக்கும் பொறிமுறையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். குறிப்பாக சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளது. அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்.
ஜனவரி நடுப்பகுதியில் உள்நாட்டு விவசாயிகளின் அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறும். அந்த விடயத்தையும் கவனத்தில் கொண்டுதான் நாம் தீர்மானங்களை எடுத்து செயல்பட்டு வருகிறோம். அரிசி இறக்குமதி செய்யப்பட்டு அவற்றை முறையாக விநியோகிகும் பொறிமுறையொன்றை பேண எதிர்பார்ப்பதுடன், சதொசவில் குறிப்பிடத்தக்களவு அரிசியை கையிருப்பில் வைத்திருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசி விலையை பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். அரிசிக்கான வரி குறைக்கப்படாமைக்கான காரணம் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே. வரி குறைப்பு செய்தால் உள்நாட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நெல்லை வழங்க முடியாது.” என்றார்.