உலக மின்சார வாகன விற்பனை 25 வீதம் அதிகரிப்பு

உலக மின்சார வாகன விற்பனை 25 வீதம் அதிகரிப்பு

உலக அளவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகாரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டில் முழுமையாக மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றின் கலவையிலான வாகனங்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 17 மில்லியன் கார்கள் விற்கப்பட்டதாகவும் தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் விற்பனை ஏற்றம் கண்டதாகவும் ரோ மோஷன் (Rho Motion) என்னும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகன விற்பனையில் சீனா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதேநேரம் ஐரோப்பியச் சந்தை நிலைபெற்று உள்ளது என ரோ மோஷன் நிறுவனம் தெரிவித்தது.

ஊக்கத்தொகையும் கரிம வெளியேற்றக் குறைப்புக்கான இலக்கும் சீனாவில் மின்சார வாகன விற்பனையை அதிகரித்துள்ளது. மேலும், கடந்தாண்டு ஆகப்பெரிய ஐரோப்பிய மின்கலன்-மின்சாரச் சந்தை என்னும் பெயரை ஜெர்மனியிடம் இருந்து பிரிட்டன் தட்டிச் சென்றதற்கு அந்த இரண்டும் முக்கிய காரணங்கள் எனவும் ரோ மோஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள தரசுகள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், இவ்வாண்டு சீனாவின் மின்வாகன விற்பனை மந்தமடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டை உருமாற்ற ஆண்டாக மின்சார கார் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் அமெரிக்கக் கொள்கை மாற்றங்களைச் சுற்றி பல கேள்விகள் எழுந்துள்ளதும் அந்தச் சந்தையின் நிச்சயமற்ற போக்கை உருவாக்கி உள்ளதாக தரவு தெரிவித்து உள்ளது.

2024 டிசம்பரில் உலக மின்சார வாகன விற்பனை 1.9 மில்லியனாக அதிகரித்துள்ளது. அது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 25.6 வீத உயர்வு. சீனாவில் மட்டும் 1.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. அது 36.5 வீத அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டு முழுவதும் சீனாவில் 11 மில்லியன் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டுள்ளமையும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Share This