ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை

தெற்கு டில்லியின் சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் 15 வயது மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த மாணவி கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படிக்கும் போது, ஆசிரியர் தனது மகளை மிரட்டி, மனரீதியாக துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகக் கூறி, சிறுமியின் தந்தை முறைப்பாடு செய்துள்ள நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
எனினும், அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 6 (சிறுவர் மீது கடுமையான ஊடுருவல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023 இன் பிரிவு 64 (கற்பழிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புனேவில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாடு தழுவிய சீற்றம் நிலவி வருகிறது. மகாராஷ்டிரா நகரின் பரபரப்பான பேருந்து நிலையத்தில் பேருந்தில் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.