கானா தங்க மோசடி: ஹிஸ்புல்லாஹ் மறுப்பு

தங்க வழங்குவதாக தெரிவித்த கானா மோசடி பேர்வழிகளிடம் தாம் 2 மில்லியன் டொலர்களால் ஏமாற்றப்பட்டதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
கானா நாட்டு ஊடகங்களில் வெளிவந்த அந்த செய்தியை இலங்கையின் சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தங்கம் வழங்குவதாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு அக்ரா சர்க்யூட் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் தலா இரண்டு சரீர பிணைகள் மற்றும் கானா பணம் 500,000 ரொக்க பிணையில் விடுவிக்கப்ட்டதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தாம் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததாகவும், அதை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அதற்கமைய 11 பேரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி செய்தி குறித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:
கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.
அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.
உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிஸார் கைது செய்தார்கள்.
இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம்.
– ஊடகப்பிரிவு-
