ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் – இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் – இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் சமர்ப்பிக்க உள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் எட்டாம் திகதி நிறைவடையவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தனது அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இலங்ழகையில் தனது அவதானிப்புகளை அறிக்கையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தளத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா மற்றும் கனடா திட்டமிட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்க உள்ளார்.

Share This