இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்

காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போர் நிறுத்தம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் அதனை தினசரி மீறி வருவதாக குற்றம்சாட்டப்படுறது. பரஸ்பரம் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை மீறுவதாக இஸ்ரேல் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இந்த பலவீனமான போர் நிறுத்தம் நீடிப்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்து அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காசாவுக்குள் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலியப் படை போர் நிறுத்த உடன்படிக்கையில் எட்டப்பட்ட மஞ்சள் கோட்டு எல்லையையும் தாண்டி வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதோடு தனது எல்லைக்குள் இருக்கும் கட்டங்களை தரைமட்டமாக்கி வருகிறது.

தெற்கு காசா நகரான கான் யூனிஸில் இஸ்ரேல் கட்டுப்பாட்டு மஞ்சள் கோட்டு பகுதிக்குள் இருக்கும் பானி சுஹைலாவில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே நேற்று மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதாக அல் நாசர் மருத்துவ வளாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமையும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இஸ்ரேலிய துப்பாக்கி படகுகள் தெற்கு காசாவின் ரபா கடற்கரைப் பகுதிகள் மீது செல் குண்டுகளை வீசி இருப்பதோடு கான் யூனிஸ் நகர் மீது பீரங்கி குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்றுக் காலை காசா நகரின் ஷுஜையா பகுதியில் பல குடியிருப்புக் கட்டடங்களையும் இஸ்ரேலிய இராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. தெற்கு காசாவில் மஞ்சள் கோட்டு எல்லையைத் தாண்டி இஸ்ரேலிய பீரங்கி குண்டுகள் விழுந்திருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ‘அனடொக்லு’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசிய ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர், ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் காசாவில் தினசரி இரு சிறுவர்கள் கொல்லப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் 1,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர் ஹமாஸ் அமைப்பு உயிருடன் இருந்த அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்ததோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருந்த மற்றும் இஸ்ரேல் தடுத்து வைத்திருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் விடுக்கப்பட்டனர்.

இதில் உயிரிழந்த மூன்று பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் இன்னும் இஸ்ரேலிடம் கையளிக்க வேண்டி இருப்பதோடு அவ்வாறான பணயக்கைதி ஒருவரின் உடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக காசாவில் இயங்கும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தது.

எனினும் அந்த உடல் எப்போது கைளிக்கப்படும் என்பது குறித்து அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.

எவ்வாறாயினும் இந்தப் போர் நிறுத்தம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்றி ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டத்தின்படியே இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனையொட்டி காசாவில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது, மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான தீர்மானம் பாதுகாப்புச் சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டபோதும் இதற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் சிக்கலானது என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் ஹசம் கஸ்ஸாம் குறிப்பிட்டுள்ளார்.

‘முற்றாக நிச்சயமற்ற சூழல் காணப்படுகிறது, அமெரிக்கா விரிவான திட்டத்தை முன்வைத்துள்ளது. அதில் எவ்வாறான படைகள் உள்ளன, அதன் பணி என்ன, அந்தப் படைகள் எங்கே நிலைகொள்ளப்போகின்றன என்பது பற்றி தெளிவின்றி காணப்படுகிறது’ என்று கெய்ரோ பேச்சவார்த்தை தொடர்பில் அறிந்த பலஸ்தீனர் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.‘அரசியல் நோக்கு இல்லாமலும், காசாவில் உள்ள அனைத்து பலஸ்தீன பிரிவுகள் மற்றும் சக்திகளுடன் புரிதல் இல்லாமலும் நிலைநிறுத்தப்படும் எந்தவொரு படையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )